திங்கள், நவம்பர் 08, 2010

வீரமாமுனிவர் எனும் தமிழ்த் தொண்டர்!

தமிழ்த் தொண்டர் வீரமாமுனிவரின் 331வது பிறந்தநாள் இன்று...

கிறித்துவ கொள்கைகளை இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழருக்கு எடுத்தியம்ப வந்த யேசுசபை அருட்தந்தை 'கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி' எனும் வீரமாமுனிவரின் பிறந்தநாளில் அவரை நினைவுகூறுவதில் மகிழ்ச்சி...

இத்தாலியில் 1680 நவம்பர் மாதம் 8ஆம் தேதி பிறந்த வீரமாமுனிவர் 1710 ஆம் ஆண்டு தமிழகம் வந்து 36 ஆண்டுகள் இறைபணி மற்றும் தமிழ் தொண்டாற்றி தமிழகத்திலேயே 1746 பெப்ருவரி 4 ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்கள்.

தமிழ் இலக்கியத்தில் 'அகரமுதலி' எனும் 'அகராதி' ('அ'கர வரிசையிலுள்ள தமிழ் வார்தைக்களுக்கு தமிழில் விளக்கம் இருக்கும்) வகை இலக்கியபிரிவில் வடமொழி மற்றும் செய்யுள் வடிவம் ஆக்கிரமித்து இருக்கையில் 'சதுரகராதி' என்ற படைப்பை தமிழுக்கு தந்தார். இதற்கு பின்னால் பல அகாராதிகள் இதனை போன்று வந்த போதும் இந்த வரிசையில் சிறந்த முதன்மையான படைப்பு இதுவாகும்.  இதனால் அவர் 'தமிழகராதிகளின் தந்தை' எனவும் அழைக்கபடுகிறார்.

தமிழுக்கு உரைநடையில் இலக்கிய படைப்புகளை அறிமுகப்படுத்தியவரும் இவர்தான், அதற்கு 'கொடுந்தமிழ் இலக்கணம்' இலக்கணமும் வகுத்துள்ளார். மேலும் தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலையும் இயற்றிவுள்ளார்.

செய்யுள், இலக்கணம், அகராதி, உரைநடை, மொழிபெயர்ப்பு, காவியம் என பல தமிழ்த்துறையிலும் சிறப்பான படைப்புகளை தந்த வீரமாமுனிவர் மொத்தம் 23 நூல்கள் தமிழில் எழுதியுள்ளார். அனைத்தும் முத்துக்கள். குறிப்பாக இயேசுவை பற்றி எழுதிய 'தேம்பாவணி' என்ற காவியம் தமிழில் அரிதான படைப்பாகும். சிற்றிலக்கியங்கள்  திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி், கித்தேரியம்மாள் அம்மானை ஆகியவற்றையும் , உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை ஆகியவற்றையும் தந்துள்ளார். திருக்குறளை (அறத்துப்பால், பொருட்பால்) இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

தமிழ் உட்பட 9 மொழிகள் தெரிந்த வீரமாமுனிவர், நீண்ட நாள் மதுரையிலும் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களிலும் மக்களை சந்தித்து, எளிய வாழ்க்கை வாழ்ந்து தம் வாழ்க்கையினாலும் தமிழறிவாலும் கிறித்துவின் போதனைகளை போதித்து வந்தார். வீரமாமுனிவர் அவ்வப்போது மதுரையில் தமிழ்ச் சங்கத்தில் கலந்து கொண்டு தமிழ்த் தொண்டாற்றி வந்தார். அவருடைய தமிழ்த்தொண்டு அளப்பெரியது. அன்னாரின் தமிழ் மொழிப்பற்று தமிழருக்கும் தமிழுக்கும் பெருமை அளிப்பதாகும்.